எல்லோருடைய வாழ்க்கையிலும் யாராவது ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வழிகாட்டிகள் யாராக இருக்க வேண்டும்?, வழிகாட்டிகளை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் பின்வரும் கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை தெரிந்திருக்கவேண்டும்.
v வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியுமா?
v வழிகாட்டுதலுக்கு நாம் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?
v சரியான நபரைத்தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோமா? நமக்கு வழிகாட்டுபவர்கள் நல்ல விஷயாதிகளா அல்லது ஞானம் உள்ளவர்களா?
v எப்போதாவது நமது மனம் ஏததவதொரு சந்தர்ப்பத்தில் குழப்பமடையும்போது, வழிகாட்டுபவர்கள் மேலும் நம்மைக் குழப்பமடையச் செய்யாமல் சரியான தீர்வை கொடுப்பவர்களாக் இருக்கிறார்களா?
நாம் ஒரு அதிமுக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, சரியான முடிவை நம்மால் காணமுடியாத நிலையில், அவ்வேலையில் ஊக்கம் குறைந்து, சோர்வு, தயக்கம், தள்ளிப்போடுதல் போன்றவைகளால் குழப்பமுற்றிருக்கும்போது நமது “வழிகாட்டிகளை” அணுகி அல்லது அவரை நினைத்து அவ்வேலையை திறம்படச்செய்து முடித்துவிடுவோம். இம்மாதிரி வழிகாட்டிகளை ‘ROLLMODEL’ என்றுகூட மனதில் இறுத்திக்கொண்டு அவர்களது வழியை நாமும் பின்பற்றலாம். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நல்ஆலோசனைகளை வழிகாட்டுபவர்களிடமிருந்து அனுதினமும் ஏதாதொரு விஷயத்திற்காகப் பெற்றுக்கொண்டுதானிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இப்படி இல்லை என்று கூறுபவர்கள் மிகச்சிலரே.
குழந்தைகளின் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள், வீடுகட்டுதல், திருமணம் மற்றும் இதர சுபகாரியங்கள் இவை அல்லாது குடுப்பத்திலோ, பணிபுரியும் அலுவலகத்திலோ, தொழில் சம்பத்தப்பட்ட ஏதாவதொரு ஒரு சிக்கலான சமயத்தில் சரியான பாதை தெரியாமல் தவிக்கும்போது நம் எல்லோருக்கும் தேவை வழிகாட்டிகளின் ஆலோசனைகள் மட்டுமே. இம்மாதிரியான பல சந்தர்ப்பங்களில் நாம் தேடவேண்டியது பெயின்கில்லரும், தலைவலி அல்லது தூக்கமாத்திரை போன்றவை அல்ல, ஒரு சரியான வழிகாட்டியைத்தான். சரியான சமயத்தில் இவர்களை அணுகும்போது, உறுதியாக நாம் பெறவேண்டியதை கண்டிப்பாகப் பெற்றுவிடமுடியும் என்பதே என் கருத்து மற்றும் அனுபவத்தில் கண்ட உண்மை.
ஒவ்வொரு மனிதனுக்கும் மாதா, பிதா, குரு இவர்கள் என்றுமே வழிகாட்டிகள்தான். சில விந்தை மனிதர்களுக்கு இயற்கை கூட வழிகாட்டிகள். சிந்தனையாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும், பார்ப்பது, அனுபவிப்பது என்று எல்லாமே வழிகாட்டுதலுக்குள் அடக்கம். வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களை, உங்களது வழிகாட்டிகள் யார் என்று கேட்டால், தங்கள் பள்ளி, கல்லூரி நாட்களில் தங்களுக்கு நல்ஆசிரியர்களாக அமைந்தவர்களைக் கூறுவதுண்டு. நமக்கு உற்ற நண்பர்கள், நல்ல புத்தகங்கள், இன்றைய உலகில் இணையதளங்கள், இமெயில்கள் போன்றவைகூட சிலசமயங்களில் வழிகாட்டியாக அமைந்துவிடுகிறது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் சில விஷயங்களில் வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு காரணமாக இருப்பதும் ஒரு உதாரணம். ஒரு முறை மிகப்பெரிய லிஃப்ட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தொடர்ந்து சரிவை எதிர்நோக்கியது. அதற்கான காரணம் என்னவென்றால், லிஃப்டை பயன்படுத்துபவர்கள், லிஃப்ப்டில் உள்ள சிறுசிறு கோளாறுகளையும், மெதுவாகச் செல்வதையும் முன்னிருத்தி அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்கள். லிஃப்டில் ஏறியவுடன் இது போன்ற சிறிய விஷயங்கள் அவர்கள் சிந்தனையில் பூதாகரமாகத் தோன்றியதே இதற்குக் காரணம். இக்குறையை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்ட அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அவரது மனைவி சொன்ன சில திருத்தங்களே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அவரது ஆலோசனையின் அடிப்படையில், லிஃப்ட்டின் நான்கு புறங்களிலும் விதவிதமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. அக அழகைக் காணமுடியாத மனிதர்கள், தங்கள் புற அழகை ரசிப்பதற்கே அதிகம் விரும்புவார்கள் என்பதுபோல, லிஃப்டைப் பயன்படுத்துபவர்களும் தங்களின் புற அழகை ரசிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். லிஃப்டில் உள்ள சிறிய கோளாறுகள் அவர்கள் கண்ணிலிருந்து விலகியது என்பதுதான் அந்த ரகசியம். சிறிய மாற்றங்களால், அக்கம்பெனி சகஜ நிலைக்குத் திரும்பியது. மனைவியின் வழிகாட்டுதலால்கணவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அவருடைய பெயர் ஓட்டிஸ் என்றும், அந்தக் கம்பெனிதான் Votis Elevators என்றும் எனது மதுரை நண்பர் சொல்லித் தெரிந்துகொண்டேன்.
மனிதனால் உருவாக்கப்படும் வாகனம், வாஷிங்மெஷின், அவென், குளிர்சாதனப்பொருட்கள் இதர பொருட்களை இயக்குவதற்கே வழிகாட்டுதல் தேவைப்படும்போது, இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு நன்மை மற்றும் தீமைகளை அறிய வழிகாட்டுதல் என்பது மிகவும் அவசியமாகிறது. நற்குணங்களோடு பிறக்கும் மானுடர்கள், சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறுவதை அனுபவத்தில் காண்கிறோம். நன்மைகளையும், இன்பங்களையும் மட்டுமே விரும்பும் மனிதர்கள், சிலசமயங்களில் தீயசெயல்கள் என்று தெரியாமல் அதைத் தேர்ந்தெடுக்கும்போது, தக்க தருணத்தில் சரியான வழிகாட்டுதலால், இச்செயல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படவும், தன்னை நல் வழிப்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுதல் என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். நாம் என்றைக்காவது, யாருக்காவது உதவியிருக்கிறோமா அல்லது வழிகாட்டியிருக்கிறோமா? என்ற கேள்வி எழும்போது பின்வரும் வரிகளை நினைவு கூர்ந்தால் ஓரளவுக்கு நாம் மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதே இவ்வஞ்சலின் நோக்கம்.
எனது அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான ராகிர அவர்கள் எங்கோ சொன்ன/எழுதிய ஒரு கருத்தை, இன்னும் கொஞ்சம் விரிவாகஇச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்தி அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு வயதான மனிதர் அறிவாளியும், அனுபவசாலியும் கூட, சமவெளியில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது மனதில் பல விதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்கே வயல்வெளியில் இரண்டு குதிரைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்றின் கழுத்தில் ஒருவித மணிகட்டித் தொங்கவிடப் பட்டிருக்கிறது. மணி கட்டிய குதிரை அவ்வப்போது தலையை ஆட்டும், அப்போது மணி எழுப்பும் ஒலி கேட்கும், பிறகு மேய்வதற்காக கொஞ்சம் இடம் மாறும். பக்கத்தில் மேய்கின்ற குதிரை அப்படியே அதனைப் பின் தொடரும்.
இப்படி மணி கட்டிய குதிரை இடம் நகரும் போது ஒரு இடத்தில் ஒரு பெறிய பள்ளத்தைத்தைத் தாண்டாமல் லாவகமாக அதன் கரை ஓரமாக சென்று கடக்கிறது. தலையைச் சாய்த்து மேய்வதைத் தவிற வேறோன்றும் அறியேன் என்கிற இரண்டாவது குதிரையும் அப்படியே செய்கிறது.
இந்த சம்பவத்தை அந்த பெரியவர் நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார், இதில் ரசிப்பதற்க்கு என்ன இருக்கிறது என்று நம்மைப்போல் சாமானியர்களுக்குத் தோன்றும், ஆனால் அந்த அறிவாளியான பெரியவர், வேறு விதமான சிந்தனையுடன் சற்று அருகில் சென்று கூர்ந்து கவனிகிறார். அவருக்கு ஒரு உண்மை புலப்படுகிறது, அந்த இரண்டாவது குதிரைக்குக் கண் தெரியாது.
உடனே அந்த பெரியவரின் எண்ண அலைகள் குதிரையைப் போல் பாய்கின்றன. ஒரு ஐந்தறிவு படைத்த ஜீவனே மற்றொன்றுக்கு வழிகாட்டியாக உள்ளனவே, ஆறறிவு பெற்ற நாம், நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களையும், கேட்டதையும், படித்ததையும் மற்றவருக்கு சொல்லி ஒரு வழிகாட்டியாக இருப்போமானால், இந்த உலகம் எப்படி இருக்கும் என்று நினைத்து, அன்றிலிருந்தே பார்ப்பவர்களையெல்லாம், பிறருக்கு “வழிகாட்டியாக இருங்கள்” அறிவுறுத்தத் தொடங்குகிறார்.
கடைசியாக,
உங்கள் வழிகாட்டி யார்?
நீங்கள் யாருக்கு வழிகாட்டி. . .
என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்?
பதில் இல்லையென்றால்!. . . . . .. . . . . .
இனி நாமும் நமக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்துகொண்டு தக்க சமயத்தில், ஏதாவதொரு விஷயத்தில் மற்றவருக்கு ஒரு வழிகாட்டியாகச் செயல்பட முயற்சிப்போமா?. . . . . . ..
நன்றி : ஜான் ஐயா
எனக்கு வழிகட்டி: என் அம்மா, லூயிஸ் ஐயா,குமார் ஐயா








